Sunday, November 17, 2019

மேய்ப்பவனின் வறுமைக்கும்

கசாப்புக் கடைக்காரரின்

பேரத்திற்க்குமிடையே

தன்னிலை மறந்து

விளையாடிக்கொண்டிருந்தது

கயிறுகளற்ற

வெள்ளாட்டுக்குட்டி 

Tuesday, May 28, 2019

இறுகச் சூழ்ந்திருக்கும்
இந்த இருள் நொடியின்
பிடியிலிருந்து விலக
பிரபஞ்சமெங்கும் சிதறிய வரிகளை
தேடிக்கொண்டிருக்கின்றேன்

அது ..
காய்ந்து சருகிய
பனையோலை இடுக்கில்
இரு வெளவால்களின்
மௌன மொழியிடையோ

இரவினை நிரப்பிக்கொண்டிருக்கும்
விட்டில் பூச்சியின் ரீங்காரத்திடமோ

மின் விசிறிக் காற்றில் சுழலும்
காகிதத்தின் சலசலப்பிலோ
ஒளிந்து கொள்கிறது

விரியும் வரிகளின் பேனா நுனியெங்கும்
மனதின் அழுகளின்
முடை நாற்றம் தாங்காமல்
விரல்களின் ஒவ்வொரு
ரேகையிலும் பதிகிறது
இந்நொடிகளின் அர்த்தம் தேடும்
வார்த்தைகளின் ஒளிநகல்


Thursday, March 7, 2019

பூமி
அவள் கருவறை..

கடல்
கரு சூழ்ந்து
ததும்பும் பனிக்குடம்..

காரிருள் வானம்
அவள் கருங்கூந்தல்..

நதி
ரௌத்திரக் குருதி பாயும்
பச்சை நரம்புகள்..

முழுநிலா
நெற்றியின் இடைத் தங்கும்
வெற்றித் திலகம்..

விண்மீன்
அயராத உழைப்பின்
அடையாளமாய்ச் சிதறிய
வியர்வைத் துளிகள்..

இடி
கால் சிலம்பு தகர்க்கும்
பேரொலி..

மின்னல்
கண் சிமிட்டிய இடைவெளி..

விதை
அவள் சூல் தங்கும்
உயிர்துளி..

விருட்சம்
அவள் வயிறு கிழித்து
சிருஷ்டித்த பெருவனம்..

ஆண்
மாதொரு பாகத்தில்
பிரிந்த பிண்டம்..

பெண்
அன்பின் வடிவெனச்
சுழலும்
படைப்பின் பேரண்டம்..