Wednesday, December 14, 2022

வலசை வரிகள் 6

சக்கர நாற்காலியில் 

ஓடித்திரியும் 

சிறுவன் 

அலைபேசி சிறைக்குள் 

அடங்கியிருக்கும் 

நான் ! 

(விதிகள் மாற்றப்படட்டும் )

     - நா.அருண்வாசகன்

வலசை வரிகள் 5

 அப்பாக்கள் அப்பாக்களாகவும் 

பிள்ளைகள் பிள்ளைகளாகவும் 

இருப்பதில்லை …

பிள்ளைகள் அப்பாக்களாகும்போது 

அப்பாக்கள் பிள்ளைகளாகிறார்கள் 

அல்லது ஆக்கப்படுகிறார்கள் .


- நா.அருண்வாசகன்

வலசை வரிகள் 4

மனைவி சொல் மந்திரம் 

என்பதில் எனக்கொன்றும் 

வெட்கமில்லை ..

அம்மாவின் அன்பையும் 

அப்பாவின் வார்த்தைகளையும் 

அப்படியே அவளெனக்குத் 

திருப்பித்தந்த போது 

          - நா.அருண்வாசகன்

வலசை வரிகள் 3

 பெரும் இரைச்சலுடன் 

தரையிறங்கி 

நிதானமாய் நிற்கச்செல்லுகையில் 

விமானம் ஏனோ …

பால்யத்தில் 

மூச்சிரைக்க சைக்கிள் மிதித்த 

அப்பாவுடனான 

பள்ளிப் பயணத்தை நினைவூட்டுகிறது …

                             - நா.அருண்வாசகன்


 

கால நதிக்கு அப்பால் ...

 நூறு கோடி யுகங்கள் 

தாண்டிய யாமத்து முடிவில் ,

இரவென்றோ  பகலென்றோ பாரா 

பெருவெளியில் பிறந்தது !

பிண்டமென்றும் ,பிள்ளையென்றும் 

சொல்லவியலா உயிர்த்துகளொன்று .


மாறிச்சுழலும் 

காலக் கடிகாரத்தின் 

மேற்கில் உதித்தது ,

பெயரிடப்படாத கோளின் ஒளி நகல் .


இரை தேடிக்

கூடுதனை  பிரிந்த பேடையின் கூவல் 

உறைந்த பெருங்கடல் 

வனமெங்கும் எதிரொலித்து , 

தொடுவானின் பாறையிடுக்கில் 

பத்திரமாய் பதியப்பட்டது .


பிண்டத்தின் தொப்புள்கொடி 

அரவத்தின் சாயலென்றும் ,

நுதலிடைத் தோன்றிய கண் …

முன்யுகத்து ஞானப்பெருக்கின் 

எச்சமென்றும் சான்றுரைக்க ,

சுழியத்தில் தொடங்கி 

உறைகடலில் சங்கமிக்கிறது 

காலம் கடந்த நதியொன்று .


-நா.அருண்வாசகன்

பொம்மைகள் தலையாட்டுவதில்லை


குற்றங்களின் நிராகரிப்பைச்

சுவைக்கும் அருவச் சாத்தானின் 

நீண்ட காத்திருப்பில் ..


முன்னிரவினை விழுங்கிய 

அரவத்தின் சொற்படிமங்களில் ..


பதில்கள் மறுக்கப்பட்ட 

கேள்விகள் மட்டும் ,

இருளில் ரீங்கரிக்கும் விட்டில்களுடன் 

ஓயாமல் இரைந்து கொண்டிருந்தன !


பட்டாம்பூச்சியின் சிறகை விரித்து 

அவள் ..

அன்றும் அப்படித்தான் ஆடையணிந்தாள் ;

கண்களற்ற ஓவியத்திற்க்கு 

வண்ணம் தீட்டினாள் ;

பாசமுடன் அப்பாவுக்கு 

தன் கடைசி முத்தமிட்டாள் ! 


பெருவனத்தில் 

தனித்த நெடுமரத்தின் மௌனத்தை 

கடக்கும் நொடிகளில் ,

தொடுவானில் கரைகிறது 

அர்த்தநாரிப் பறவையொன்றின் 

துயரப் பாடல் ! 


கொடுங்கனாவொன்று 

களையும் வேளையில் 

அந்தப் பட்டாம்பூச்சிகளின் 

சிறகு முறியும்போது ..

உயிருள்ள பொம்மைகள் 

எதுவுமே தலையாட்டுவதில்லை ! 


                        -  நா. அருண் வாசகன்

Friday, July 8, 2022

வலசை வரிகள் 2:

வெண்கழுத்து 

உலோகப் பறவையிலமர்ந்து 

பெப்பெர்மெண்ட் நறுமணம் 

நுகர்ந்து 

எத்தியோப்பிய 

காபியை பருகும்போது 

உணரமுடிகிறது 

அதிகார அடிமைத்தன நூலிழை !

வலசை வரிகள் 1 :

அமெரிக்க விமானத்தில் 

ஐரோப்பிய பயணங்களைப் படித்து 

ஆப்பிரிக்க முதுமகளுடன் 

பறக்கும் நான் 

ஆசியாவின் 

சமத்துவத் தூதுவன் தானே ? (ஸ்மைலியுடன்)