Saturday, October 15, 2011

பயணம்

அது ஒரு அதிசய நிறுத்தம்

முதல் பேருந்து காலியானது
பயணம் புரியவில்லை ...

இரண்டாமது நெருக்கங்களின் உச்சாணிக் கொம்பு
பயணம் மறுக்கப்பட்டது ...

பின் மூன்றாமது மீண்டும் காலியானது
பயணம் தவிர்க்கப்பட்டது ...

உடன்பாடுகள் திருத்தப்படாமல்
இலக்கின்றி பயணம் முடிந்தது ...

இப்பொழுது இன்னொரு பேருந்தின்
முன்னறிவிப்பாய் ஒரு மெல்லிய நிசப்தம் !!!!

Sunday, July 31, 2011

"......."

களைக்க மனமில்லை
புது வீட்டில் சிலந்தி வலை !!

Saturday, June 11, 2011

உயிர்மையுவகை

நேர்வகிடு...

திருநீறு...

குங்குமத் திட்டு...

வட்டக் கரு மை ...

வளை புருவம்...

கூர்விழி...

செவ்விதழ்...

மணிக் கழுத்து...

மெல்லிடை..


உயிர் கிழிக்கும் போர்க்கருவி

இன்னும் மிச்சமிருப்பின் ...

தாளாது ஒழியட்டும்

இந்தப் பேருலகச் சாக்காடு ...!!

யார் இவர்கள் ??

மௌனத்தை கொலை செய்யும் வண்ணத்துப்பூச்சிகள்

இரைச்சல் யுத்தத்தில் யாசிக்கும் சின்னஞ்சிறுமிகள்

யோசிக்கும் முதுமையும் அதை வாசிக்கும் இளமையுமான ராஜாங்கங்கள்

எதோ ஒன்றை சொல்ல பிரிந்திருக்கும் பாலங்கள்

முகமுடி அணியாமல் அதை முடிசூடிக் கொள்ளும் சில அகோரங்கள்

தேடல் குறிக்கோள்களில் தன்னை தொலைத்துக் கொள்பவர்கள்

தனிமை இலக்கணம் மறுப்பவர்கள் அல்லது மறக்கப் படுபவர்கள்

நிஜங்கள் ஏதும் சொல்வதற்கில்லை

யார் இவர்கள் ? கேள்விகளாக முடியும் கானல்கள் ! ! !

Monday, April 25, 2011

நாட்காட்டி

பின்னது பதிப்பதில்

முன்னது கழிதல்

இன்னொரு தொகைக்கெழு வடுவாதல்

மூப்பது மரித்தலும்

முதிர் கரு பிறத்தலும் ..!

அந்தப் பொழுது

வானத்தின் அப்பால் முளைத்த மரமொன்றின்
வேர்க்கிளைகள் பூமி வரை ஊன்றி மறைவதும் ...

சிகப்புக் கோடிட்ட எல்லைக்குள்
புணர்வுகள் வகுக்கப் படுவதும் ...

அத்துமீறல்களின் சலசலப்புகள்
அந்த இளஞ்சூட்டுப் படிமத்தில் பொத்தல்களாக்கப்படுவதும்..

பதிவுகளற்ற தளமொன்றில்
பனிச் சில்லுகள் வேயப் படுவதுமான

அந்தப் பொழுது .....அந்திப் பொழுது ....

இன்னும் சில இணைதல்களில் பயணப்பட்டிருக்கலாம்
அல்லது ...
ஏதுமற்றதாய் தொங்கும் கிரகம் போல் நிர்வாணப்பட்டிருக்கலாம் ..!

Wednesday, April 6, 2011

பிறத்தல் கொள்கை ..

அதனை ..

அக்கணம்..

அப்படியும் கொல்லுமதனால்..??!

நானும் கொன்றழித்தேன் ..

சில அமானுஷ்யத்தின்

ரௌத்திரக் காதலையும் ..

அதுவறுககும் சூத்திரக் காமத்தையும் ..

மௌனம் ...மௌனம் ...

சகிக்க முடியாத பிறத்தல் மௌனம் ...!!!

Friday, April 1, 2011

தங்கச்சிப் பாப்பா ..!

வண்ணத்துப் பூச்சியின் பட்டாபிஷேகமன்று !!


'கோ' என கொட்டிய அருவியின்


திவளைப் பொடிகள் பரப்பிய திரையில்


கொஞ்சம் கொஞ்சமாய் ...


அரங்கேற்றம் நடத்திக் கொண்டிருந்தது வானவில்



முன்னிரவிலேயே ...


மந்தமான கருமை மற்றும்


அடர் வெள்ளை நிறத்தில்


துகில் மாற்றி ஒத்திகை பார்த்துக் கொண்டது


நீலக் குடையின் இரண்டாம் கைக்குழந்தை ..


(விண்மீன்கள் ஜரிகை செய்து கொண்டிருந்தன !)



வைர மணி குண்டுகளை பக்குவமாகக் குழைத்து


உச்சியில் சூடிக் கொண்டன


அந்த வெளிர் பச்சைப் புல்லினங்கள்..


அம்மணிகளின் பிரதிபலிப்பில்


முதல் கட்ட ஒப்பனை செய்து கொண்டது சூரியன்


பிறகு வைரங்கள் களவாடப் பட்டன ..



நொடிகள் மறந்து விடாமலிருக்க


கடிகாரங்களின் முன்னேற்பாடாய்


செறுமிக் கொண்டிருந்தது சேவலொன்று ...



சாவி கொடுக்கப்பட்ட நெகிழி பொம்மையென


தண்டவாளங்களில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தது


அந்த புகை கக்கும் அட்டைப் பூச்சி ...



பெயர் தெரியாத பறவையொன்றின்


மிக மெல்லிய பின்னிசையில்


அழகியலின் அத்துணை சாராம்சத்தையும்


தன் ஒற்றைச் சிரிப்பில் அள்ளி சேர்த்துக் கொண்டு


வளர்தல் படிவத்தின் அடுத்த பக்கத்தில்


ஒப்பந்தக் கையெழுத்தாய்


மெழுகுவர்த்திகளை ஊதி முடித்தாள்


தங்கச்சிப் பாப்பா ...!!!


தோழியரின் கைத்தட்டலில்


இனிதே நிறைவுறுகிறது


அந்த வண்ணத்துப் பூச்சி பட்டாபிஷேகம் !!!

Monday, March 28, 2011

ஹைக்கூ

தூரல் பனி ...

கண்மணியாள் ...

மற்றும் முற்றத்து நிலா...

மன்னிக்கவும் அஃது அழகிப் போட்டியன்று !!!!

Friday, March 25, 2011

மாற்றுத் திறனாளி

எட்டுத் திக்கும் இலவசம் !!!!!

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்

கருக்குழாய் குழந்தைகள்

நடப்பில் உள்ளது

அடுத்த காலத்தில்

'அந்த' வேலையும் மிச்சப்படும் ..

தொட்டதெல்லாம் தள்ளுபடி ..!!!

தொலைத்த சில வகைகள் விற்பனைக்கு உள்ளன ..

பேரம் பேசிப் பார்க்கலாம்

நல்ல விலை படியும் ...

நல்லவேளை !!

என்னவன் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறான்

மதுக்கடை இன்னும் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது

பிச்சை கேட்பவன்

நல்லவனாகவே மதிக்கப் படட்டும் !!!

ஒரு திருத்தம் !

சத்தியமாக நான் சொல்வது நீங்கள் நினைப்பதல்ல

என்னவன் ஒரு மாற்றுத் திறனாளி

அவ்வளவுதான் .!

இன்னும் குறிப்புரை தேவையோ ???

தெளியச்சொல்கிறேன்

என்னவன் பெயர் இளைஞன் ..

வெட்கம் என்னையும் காரி உமிழ்கிறது ..

கையறு வாழ்க்கையிது ...

துடைத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறேன்

மதுக்கடை ....

இன்னமும் பல்லிளித்துக் கொண்டு தான் இருக்கிறது ..!!!!

பதிவிறக்கக் கனவு

அப்படி ஒன்றும் பெரிதான கனவில்லை...!!!

ஒரு கவளச் சோறாகினும் ஊர் கூடும் பந்தி ...


ஒரு வருடப் பிரிவாகினும் ஒரு நாள் தேரோட்டம் ...


சற்று தாமதம் ...இருக்கட்டும் அந்த மாட்டு வண்டி பயணம் ..


ஆட மறந்து விட்டாலும் ...பொக்கிஷம் கிட்டுப் புல் கட்டை ...


வார்த்தை புரியாது ..இருந்தாலும் கேட்க வேண்டும் கிழவியின் கதைகள் ..


இன்னும் அறுந்துவிட வில்லை ..ஆட மனமில்லாத புளிய மர ஊஞ்சல் ...


அடுத்த வண்டி பார்த்தே கற்றுக் கொண்ட அந்த மணிக் கணக்குகள்...


ஒரு ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் கற்பூர மிட்டாய் ..


பட்டாளத்து பயணம் முடிந்து வரும் அப்பாவை பார்ப்பது ...


பெட்டி நிரைய நிரப்பிக்கொள்ளும் கரும்பலகை பலப்பம் ...


இப்படி சிதறிப் போன வாழ்க்கை மட்டும் போதும்.....


எந்த முக நூலிலோ ....அல்லது வலைதளத்திலோ இருந்தால் சொல்லுங்கள் ..


அடுத்த தலைமுறைக்குச் சொல்லி தருவதற்குள் செத்தே போய்விடும்


இந்த பதிவிறக்கக் கனவுகள் .... !!!!

Thursday, March 24, 2011

குளக்கரை மணலிலும் ...

சாரல் மழையிலும்...

அறிமுகமில்லாத மௌனத்திலும் ..

உன் விரல் பிடித்து நடப்பதில் ..

கொள்ளை பிரியம் எனக்கு !!!

Friday, March 11, 2011

"....."

இன்னுமொரு கற்பழிப்பு

பட்டறைகளுக்காக கருவறுக்கப்பட்டது

பக்கத்து நில தென்னந்தோப்பு !!!

இயல்பின் திரியாமை

பின்னிருக்கைக்கான

ஜன்னலோரப் பயணத்தில்

கவிதைகள் வரையப்பட்டிருந்தன

அவன் பெயர்...

அம்பு தைக்கப்பட்ட இதயம்...

மற்றுமதன் கீழாக அவள் பெயர் ....

அம்பின் கூர் நுனியில்

ரத்தம் அல்லது கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது ...

தியாகம் அல்லது தோல்வி ...

எதுவாகவும் இருக்கலாம் அந்த அடையாளம்.

பச்சை ,சிவப்பு ,அல்லது நீலம்

அது வரைந்தவனின் கையிருப்பைப் பொறுத்தது..

இன்னும் கண்கள் மேயப்படுதலில் சிக்கியது ...

அவர்களுக்கே உண்டான அந்த அதிசயப்பட்டங்கள் ..

குழுமங்கள் இன்ன பிற இத்தியாதிகள் ...

எது எப்படியோ ........!!!!

வெப்பத்தின் எச்சங்கள் சிதறிய அப்பொழுது

எவரது ரசித்தலுக்கும் பணயப்படவில்லை

பயணம் மட்டும் தொடர்ந்து கொண்டே ....

ஒரு வேளை அடுத்த சந்திப்பில் எனக்கானவள் காத்திருக்கலாம்

நானும் அவசரமாக வாங்கிக் கொண்டேன்

அந்த பச்சை ,சிவப்பு, அல்லது நீல நிற மை பேனா !!

Wednesday, March 2, 2011

பெண்ணியமென்னும் உயர்திணை

சின்னதாய் புன்னகைத்து

சித்திரமாய் நடை பழகி

மழலைக் கவி சொல்லி

செல்லமாய்க் கைப் பிடிப்பாள்

கொஞ்சு மொழி பேசும் பேதையெனும் பெண்ணொருத்தி.


இன்னுமொரு காலத்தில்

சொப்புக் கலனேடுத்து

பொய்ச்சோ று ஆக்குவித்து

ஊர் கூடப் பந்தி வைப்பாள்

பேதை வயதடுத்த பெதும்பையெனும் பெண்ணொருத்தி.


சில திங்கள் நாள் கழித்து

வசந்தம் வருகுதனில்

வாடை கால் வருடி

வெண்முல்லைப் பனிமொட்டு

நித்தம் மலர்வது போல்

நாணம் துளிர் கொள்ள

பூவையென மலர்ந்திடுவாள் மங்கையெனும் பெண்ணொருத்தி.


காலம் கரைவதனில்

வண்டின் இனம் கண்டு

முல்லை தேன் சொரியும்

இன்னும் சொல்வது கேள் !


செந்தமிழ் வரியனைத்தும் மௌனித்த மொழியாகும் ;

கூர்விஷப் பார்வைதனில் கூற்றுவன் குடிகொள்ளும் ;

காதலுரைத்திடுவாள் சற்றே காமமுமுரைத்திடுவாள்;

கம்பன் கவி தொட்டு காப்பியமாயணி செய்வாள் ;

பாலை நிலம் காணும் புது மழை பெய்யலவள் மடந்தையெனும் பெண்ணொருத்தி


திங்கள் ஈரைந்தும் இன்முகமாய்க் கணக்கெடுப்பாள் ;

தீச்சுடராயினும் தீண்டுதலில் மனமுறைவாள்;

சாத்திரம் கலந்து கொஞ்சம் ரௌத்திரமும் ஊட்டுவிப்பாள் ;

அன்னையெனப் பெயர் கொள்வாள் அறிவையெனும் பெண்ணொருத்தி.


மீதிரண்டு பருவமுண்டு ..

தெரிவையென வொன்றும்..

பேரிளம் பெண் என வொன்றும்..

தேரான் தெளிவு தீரா இடும்பதனால்

தீர்க்கச் சொல்வேன் !!

உலகத்தினின்ற உயர்திணை ..

"பெண்ணியம்" என்று !!!

அறியாமை

அநேகமானவர்களுக்கும்

அவள் அறிமுகப்பட்டிருப்பாள்...

சிகப்பு ரோஜா

காதல் சின்னமாமே ...?!

Tuesday, March 1, 2011

அடுத்த கட்டம்

துன்பம் மறத்தலுக்கான

இரண்டாம் பிரதியை

என் அப்பாவுக்கு கொடுக்க வேண்டும் ..

முதல் பிரதி ?!

எனக்கு முன்னமே கிடைத்து விட்டது

இனி சுமப்பது தான் பாக்கி !

தேர்வு எண் :இருபத்து நான்கு

தேர்வு எண் :
" இப்போதைக்கு இருபத்து நான்கு"

தேர்வின் பெயர்:
"தகப்பன் சாமி"

தேர்வர் :
"நான்"

"தியாகம்"
சிறுகுறிப்பு வரைக
"அப்பா ! "

அருஞ்சொற்பொருள் தருக
"வறுமை மற்றும் துன்பம் :"
தெரியாது
அப்பா சொன்னதாய் விவரமில்லை

நிரப்புக :
"--------------" ஒரு வாழ்வியல் பாடம்
கோடுகள் கொடுத்து வைத்தவை !
அப்பாவை சுமக்கப் போகின்றன ..

கட்டுரை வரைக :
"உழைப்பு"
மன்னிக்கவும் !
அப்பாவின் செருப்புக்கு எழுதத் தெரியாது ...!

பின் குறிப்பு:
தேர்வு எண்
மறு பரிசீலனைக்குட்பட்டது !!!

இன்பம் தொலைதல்

"வா ....போ ...."

என்ற உரிமையான வார்த்தைகளும்

சற்று கனத்து தான் போகிறது !

சில ஆண்டுக்கான பிரிதலிலும்

மரியாதை நிமித்தமான உரையாடலிலும் !!

காதல் சண்டாளன்

பரிமாணங்கள் வித்தியாசப்படுதலில்

முதலாவதாகத் தோன்றுவதெல்லாம்

கிறுக்கல்கள் தான் போலும் ....!!


அன்றும் அப்படிதான்

எனக்கும் பேனாவிற்கும்

மூன்றாம் உலகப்போர் ..!

என் சிந்தனைகள் எதுவுமே பிடிக்கவில்லையாம் !


வெற்றி தோல்விகள் நிர்ணயித்தலின்

உச்சஸ்தாணியில் வெற்றியெனக்கு...!

வேறென்ன ?!

கருவாக்கம் அவளைப்பற்றியது தான் !


வில்லொத்த புருவமென்றோ ...

நிலவொத்த பளிங்கு முகமென்றோ...

மைகவ்வும் கண்களென்றோ...

கால்தடப் பதிவுகள் கவிதையென்றோ...

வழக்கமாக வர்ணித்திருந்தால்

எக்காளமாய்ச் சிரித்திருக்கும் என் பேனா !


காதலும் காமமும் கலவி நுகர்ந்து ...

விடியலுக்கான வெட்கச் சிவத்தலில்...

நாணம் அதுவென்றும் நளினம் இதுவென்றும்

சில இரட்டிப்பு மொழிகளை

சிந்தையில் உறவாடி பிறகு சொன்னேன்

அவள் பெண்ணியம் அப்படியென்று !

சண்டாளன் !!!!

இப்போது என் பேனாவுக்கும் மோகத்தீ மூண்டு விட்டதாம் ?!!

"....."

அன்று மட்டும்

வார்த்தைகள்

சற்று அசௌகரியப்பட்டிருந்தன

"......முதலிரவு !!!!"