Wednesday, March 2, 2011

பெண்ணியமென்னும் உயர்திணை

சின்னதாய் புன்னகைத்து

சித்திரமாய் நடை பழகி

மழலைக் கவி சொல்லி

செல்லமாய்க் கைப் பிடிப்பாள்

கொஞ்சு மொழி பேசும் பேதையெனும் பெண்ணொருத்தி.


இன்னுமொரு காலத்தில்

சொப்புக் கலனேடுத்து

பொய்ச்சோ று ஆக்குவித்து

ஊர் கூடப் பந்தி வைப்பாள்

பேதை வயதடுத்த பெதும்பையெனும் பெண்ணொருத்தி.


சில திங்கள் நாள் கழித்து

வசந்தம் வருகுதனில்

வாடை கால் வருடி

வெண்முல்லைப் பனிமொட்டு

நித்தம் மலர்வது போல்

நாணம் துளிர் கொள்ள

பூவையென மலர்ந்திடுவாள் மங்கையெனும் பெண்ணொருத்தி.


காலம் கரைவதனில்

வண்டின் இனம் கண்டு

முல்லை தேன் சொரியும்

இன்னும் சொல்வது கேள் !


செந்தமிழ் வரியனைத்தும் மௌனித்த மொழியாகும் ;

கூர்விஷப் பார்வைதனில் கூற்றுவன் குடிகொள்ளும் ;

காதலுரைத்திடுவாள் சற்றே காமமுமுரைத்திடுவாள்;

கம்பன் கவி தொட்டு காப்பியமாயணி செய்வாள் ;

பாலை நிலம் காணும் புது மழை பெய்யலவள் மடந்தையெனும் பெண்ணொருத்தி


திங்கள் ஈரைந்தும் இன்முகமாய்க் கணக்கெடுப்பாள் ;

தீச்சுடராயினும் தீண்டுதலில் மனமுறைவாள்;

சாத்திரம் கலந்து கொஞ்சம் ரௌத்திரமும் ஊட்டுவிப்பாள் ;

அன்னையெனப் பெயர் கொள்வாள் அறிவையெனும் பெண்ணொருத்தி.


மீதிரண்டு பருவமுண்டு ..

தெரிவையென வொன்றும்..

பேரிளம் பெண் என வொன்றும்..

தேரான் தெளிவு தீரா இடும்பதனால்

தீர்க்கச் சொல்வேன் !!

உலகத்தினின்ற உயர்திணை ..

"பெண்ணியம்" என்று !!!

No comments:

Post a Comment