Monday, September 17, 2012

.....


என்றுமே  இல்லாமல் 
ஏன் இப்படி அழகாய் தெரிகிறாய்  ..
தெப்பத்தில் விரிந்து படர்கிறது 
புரிதலுக்கான நீர்மை ஓவியங்கள் ..

பேடையின் குரலுடன் ஒன்றிக் கரைகிறது 
இருவருக்குமே  சொல்லப்படாமல் 
சிக்கிக் கொண்ட வார்த்தைகளில் ஒன்று ...

எதோ ஒன்றிற்காக நிர்வாணப்பட்டு 
பகிர்ந்து கொள்கிறோம் ..
யாவரும் அறிந்து கொள்வதற்கான சமிஞைகளில் ..
எதுவும் தெரியாமல் நீ மட்டும் ஒளிந்து கொள்கிறாய் 
தொலைதலுக்காக வளர்க்கப்பட்ட தேவதை  வனங்களில் ..

மீண்டும் ஒருமுறை கைகோர்த்துச் செல்லக் கடவது ..
நடுத்தரச் சாலை ..புளியம் பூ உதிர்வுகள் 
அனிச்சையாய் தலை வருடலும் ..
கொஞ்சம் இளஞ்சூடு தேனிரும் ...

Wednesday, August 22, 2012

குதிரைக்காரி


விஷம் அடர்ந்ததொரு வெட்டக் கானகத்தில் 
ஆண்மதிமிர் கொண்ட தறி கெட்ட குதிரையை 
பிடரிமயிர் பிடித்தடக்கக் கிளம்பினாள்
சாரதியொருத்தி ...!


அவள் வலக்கையில் க்யூபிட் அம்பும் 
அதன் அறுக்கப்பட்ட சிறகுகளுடன் ...
சில ரத்தத் துளிகளும் படிந்திருந்தன !!

அவள் வேகத்தின் ஈடு தாங்காமல் 
குளம்புகள் வீங்கித் தெரித்த அக்குதிரைக்குப் 
பின் தொடர்ந்த எறும்புகளும் வண்டுகளும் ..
அதன் தீ வடு குடைந்து தம் நாக்கினை குரூரச் சிவப்பாக்கின  !! 

காமம் தாளாத அப்பரியின் கண்களை 
வலக்கை அம்பினில் குத்திக் குதறி 
கணன்ற தன் மாரறுத்து கழுகுக்கும் , ராட்சதக் கெவுளிக்கும்
போதும் வரை இரையாக்கினாள்  அப்புனிதச் சாரதி ...!!

மீண்டெழுதல் மறக்கப்பட்டு  
புதைச்சகடுகளுடன் புணர்ந்து சாவதாக 
சபிக்கப் பட்டது அம்மனகுதிரை ..

அரவசீற்றலடங்களில் 
விஷமத்தின் சாம்பல் கழுவதொடங்கியதும் 
மதம் தெளிந்து... வெள்ளை நிறம் மாறி... 
அதே வண்ணத்தின் இரண்டு இறக்கைகளுடன் 
ஒரு பேரொளி வனத்தில் ...
தனது சாரதியை சுமந்து பறக்கிறது அந்த ஆண்மக்குதிரை ...!!!!

எது நடக்கிறதோ .!!!....அது நன்றாகவே நடக்கிறது ...

Monday, July 30, 2012

ஆதலால் ....தம்பி உடையோன்...


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள 

நண்பனுக்கோ அல்லது காதலிக்கோ 

தேவை இருக்காது ...


நீங்கள் மறந்தாலும் 

வருடம் தவறாமல் 

பிறந்த நாள் புதுச் சட்டை வந்து சேரும் ..


சில வாரக் கடைசிகளின் பயணங்களில் 

பதிவுகளற்ற ரயில்பெட்டியிலும் 

உங்களுக்கான இருக்கை

சௌகரியமாய் வாய்த்திருக்கும்...


பழைய துணிகள் யாவும் 

மீண்டுமொருமுறை புதுப்பிக்கப்படும் ..


வீட்டுப் புதுவரவுகளில் 

நிச்சயம் இந்தக் கையொப்பம் இருக்கும் ..


அப்பா ...மிக நெருங்கிய நண்பன் கிடைத்தாய் 

 மனதுக்குள் குதூகலிப்பார் ...


அம்மாவுக்கு மீண்டுமொரு 

மாமியார் சண்டை காத்திருக்கும்..


குடும்பத்தலைவன் சாயலப்பிக்கொள்ளும் 

ஒத்திகை நிதம் அரங்கேறும் ...


ஒரு தேநீர் கடை 

கடற்கரை 

அல்லது சாலையோரச் சுவர் போதும் 

உலகத்தை ஏறக்குறைய அலசி விடலாம் ...


விரட்டிச் செல்லும் நிமிடங்களில் 

சிலவற்றை இவனுடன் ஒதுக்கிப் பாருங்கள் 

உங்களுக்கான ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றை நிழல் 

ஒரு நாய் குட்டி போல் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ...

................சிறகு


ஒரு புனிதத்தின் எதிர் இருக்கையில்

நெட்ட நெடுஞ்சாலையின் வெறித்த பார்வையில் 

வெம்மை துண்டங்களை ஒரு சேர கிரகித்து துப்பும் துளிகளில் 

ஓலமிட்டு ஓய்ந்து தள்ளும் நீலபெருங்கடலில் 

கர்வத்தில் ஓங்கி உயரும்  பெருமலையில் 

பகலின் முடிவில் சிதறித்தொங்கும் பிரபஞ்சத்துகளில் 

எங்கு சென்று தேட 

அர்த்தங்களற்ற பொழுதுகளில் தொலைத்த 

ஒற்றைச் சிறகினை ..

Thursday, June 28, 2012

அட ..

ஃ பெதர் டச் திரையை

தொட்டு விளையாடுகிறாள்

ஒரு தேவதை ...

ஒவ்வொரு முறையும்

வண்ணத்துபூச்சியாகிவிடுகிறது.....

செல் ஃபோன் .....

தெரியாமல் .....

சொல்ல நினைக்கும்

வார்த்தைகளுக்காக

ஒவ்வொரு முறையும்

ஃ பீனிக்ஸ் பறவையின்

இறகினை கடன் வாங்கிக் கொள்கிறேன் ....

Monday, June 18, 2012

ஒரு கார்ப்பரேட் இரவிலிருந்து ....


விண்டோஸ் வால்பேப்பர் வழியாக

தொடங்குகிறது ஒரு புரிதலின் நுழைவாயில் ...

தொடுவானம் வரை விரிந்த புல்வெளியில்

மிளிர்ந்த சிரிப்பின் அடையாளமும்

நினைவுப் பொதிமூட்டைகளும்

பதிவுகள் நிரம்பி வழியும் மௌனமும்

பால்யத்தில் படித்த டாஃபடில்ஸ் மலரிலோ ..

சமவெளியின் பின்னிருப்பதாய் தோன்றும் சிற்றோடையிலோ ..

ஒரு குட்டி தேவதையின் கைகளால்

ரகசியமாய் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது ...


வியாபித்து விரியும் போதி மரத்தின் இலைத்திட்டுகளில்

கருணையின் பரிசுகளும் ..

அது சார்ந்த காத்திருப்பின் தடயங்களும்

சில துளிகளாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது ...


இனியெப்போதும்

நீர்த்துப் போன சோகங்களையும்..

வார்த்தைகளின் வியாபாரப் பிதற்றல்களையும்...

அர்த்தமற்ற வாழ்வினையும் குப்பையில் போடுங்கள் ...


ஒரு கர்ஸரின் தியானத்திலும் கூட

இந்த பிரபஞ்சமே இருண்டு விடக் கூடும் …

Friday, June 1, 2012

ஆரம் ....!!!!

எனக்கு அன்று பிறப்பில்லை
வட்டத்தின் ஆரம் முடிவிலி

சில நூறு கோடி தாண்டிப் புணர்தலில் கருவானேன்
வட்டத்தின் ஆரம் கணக்கிடப்பட்டது

இருத்தல் போதுமென மோதிக் கிழித்து  வெளியானேன்
வட்டத்தின் ஆரம் சுருங்கியது

மானுடம் பயின்று  பகிரவும் செய்தேன்
வட்டத்தின் ஆரம்  குறைந்தது

நாட்காட்டி தீர்ந்த பின் பயணப்பட்டேன்
ஆரமும் வட்டமும் ஒன்றாய் புணர்ந்தது

கடைசியில் மீண்டும் நான் ஒரு சூட்சமம்
அல்லது முடிவிலி ....

Wednesday, May 23, 2012

அரை நிர்வாணமாக்கப்பட்ட கதவு

இது யாரிடமும் தன்னைப் பற்றிச் சொல்வதில்லை

உள்ளும் புறமும் தாழிட்டுக் கொள்ளும்

தன் சுயம் அறிந்திருக்காது

தருணங்களுக்கேற்று திறந்து கொள்ளும்

எப்பொழுதும் ஏதும் தெரிந்திருக்காது

மேதாவிலாச பாவனையுடன் அசைந்து கொண்டிருக்கும்

சில சமயம் தடுப்புகளுக்குள் தன்னை அகப்படுத்தும்

வருவோர் போவோரை எப்போதும் நோட்டமிடும்

செல்லரித்துக் கொள்வதை கண்டுகொள்ளாது

ஒப்பனைகளுக்கு பஞ்சமிருக்காது

ரகசியங்கள் ஏதும் அனுமதிக்காமல்

தனக்கேற்ற சாயங்களை பூசிக்கொள்ளும் ....

இன்னும் சொல்வதென்றால்

உணரவற்ற பொழுதுகளில்

நிர்வாணமாகப்படுவது கதவுகள் மட்டுமல்ல ....  

Wednesday, February 1, 2012

அர்த்தநாரிச் சிறகுகள்


காதல் பகிர்மானச் சின்னங்கள்

தொடர்வற்றதொரு பயணத்தில் தேடப்பட்டிருந்தன


இதயம் சிறகடித்துப் பறப்பது போலும்

கலவி நுகரும் புள்ளினங்கள் போலும்

கல்லறை ஓவியமொன்று காத்திருப்பது போலும்

இன்னும் சிலவகையில் பதிவிறக்கிய பொழுதுகளில்

இலக்கணப் பிழை என்றெண்ணி

சலனங்கள் ஏதுமில்லாமல்

தன் கடைசிச் சிறகையும் வேரறுத்துக் கொண்டிருந்தது

பாலிழந்ததாய் நிராகரிக்கப்பட்ட

அர்த்தநாரிப் பறவையொன்று...


பிறிதொரு கணத்தில் உயிர்க்கூறருப்பது போல்

யாசிப்பதாய் சமிக்ஞை செய்தது

மேற்குச் சிவத்தலில் இரையான தகவல்

யார்க்கும் தெரியாத விசித்திரம் !!!

அர்த்தநாரிச் சிறகுகள்

காதல் பகிர்மானச் சின்னங்கள்

தொடர்வற்றதொரு பயணத்தில் தேடப்பட்டிருந்தன ...

இதயம் சிறகடித்துப் பறப்பது போலும்

கலவி நுகரும் புள்ளினங்கள் போலும்

கல்லறை ஓவியமொன்று காத்திருப்பது போலும்

இன்னும் சிலவகையில் பதிவிறக்கிய பொழுதுகளில்

இலக்கணப் பிழை என்றெண்ணி

சலனங்கள் ஏதுமில்லாமல்

தன் கடைசிச் சிறகையும் வேரறுத்துக் கொண்டிருந்தது

பாலிழந்ததாய் நிராகரிக்கப்பட்ட

அர்த்தநாரிப் பறவையொன்று...

பிறிதொரு கணத்தில் உயிர்க்கூறருப்பது போல்

யாசிப்பதாய் சமிக்ஞை செய்தது

மேற்குச் சிவத்தலில் இரையான தகவல்

யார்க்கும் தெரியாத விசித்திரம் !!