வண்ணத்துப் பூச்சியின் பட்டாபிஷேகமன்று !!
'கோ' என கொட்டிய அருவியின்
திவளைப் பொடிகள் பரப்பிய திரையில்
கொஞ்சம் கொஞ்சமாய் ...
அரங்கேற்றம் நடத்திக் கொண்டிருந்தது வானவில்
முன்னிரவிலேயே ...
மந்தமான கருமை மற்றும்
அடர் வெள்ளை நிறத்தில்
துகில் மாற்றி ஒத்திகை பார்த்துக் கொண்டது
நீலக் குடையின் இரண்டாம் கைக்குழந்தை ..
(விண்மீன்கள் ஜரிகை செய்து கொண்டிருந்தன !)
வைர மணி குண்டுகளை பக்குவமாகக் குழைத்து
உச்சியில் சூடிக் கொண்டன
அந்த வெளிர் பச்சைப் புல்லினங்கள்..
அம்மணிகளின் பிரதிபலிப்பில்
முதல் கட்ட ஒப்பனை செய்து கொண்டது சூரியன்
பிறகு வைரங்கள் களவாடப் பட்டன ..
நொடிகள் மறந்து விடாமலிருக்க
கடிகாரங்களின் முன்னேற்பாடாய்
செறுமிக் கொண்டிருந்தது சேவலொன்று ...
சாவி கொடுக்கப்பட்ட நெகிழி பொம்மையென
தண்டவாளங்களில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தது
அந்த புகை கக்கும் அட்டைப் பூச்சி ...
பெயர் தெரியாத பறவையொன்றின்
மிக மெல்லிய பின்னிசையில்
அழகியலின் அத்துணை சாராம்சத்தையும்
தன் ஒற்றைச் சிரிப்பில் அள்ளி சேர்த்துக் கொண்டு
வளர்தல் படிவத்தின் அடுத்த பக்கத்தில்
ஒப்பந்தக் கையெழுத்தாய்
மெழுகுவர்த்திகளை ஊதி முடித்தாள்
தங்கச்சிப் பாப்பா ...!!!
தோழியரின் கைத்தட்டலில்
இனிதே நிறைவுறுகிறது
அந்த வண்ணத்துப் பூச்சி பட்டாபிஷேகம் !!!
No comments:
Post a Comment