Wednesday, December 14, 2022

பொம்மைகள் தலையாட்டுவதில்லை


குற்றங்களின் நிராகரிப்பைச்

சுவைக்கும் அருவச் சாத்தானின் 

நீண்ட காத்திருப்பில் ..


முன்னிரவினை விழுங்கிய 

அரவத்தின் சொற்படிமங்களில் ..


பதில்கள் மறுக்கப்பட்ட 

கேள்விகள் மட்டும் ,

இருளில் ரீங்கரிக்கும் விட்டில்களுடன் 

ஓயாமல் இரைந்து கொண்டிருந்தன !


பட்டாம்பூச்சியின் சிறகை விரித்து 

அவள் ..

அன்றும் அப்படித்தான் ஆடையணிந்தாள் ;

கண்களற்ற ஓவியத்திற்க்கு 

வண்ணம் தீட்டினாள் ;

பாசமுடன் அப்பாவுக்கு 

தன் கடைசி முத்தமிட்டாள் ! 


பெருவனத்தில் 

தனித்த நெடுமரத்தின் மௌனத்தை 

கடக்கும் நொடிகளில் ,

தொடுவானில் கரைகிறது 

அர்த்தநாரிப் பறவையொன்றின் 

துயரப் பாடல் ! 


கொடுங்கனாவொன்று 

களையும் வேளையில் 

அந்தப் பட்டாம்பூச்சிகளின் 

சிறகு முறியும்போது ..

உயிருள்ள பொம்மைகள் 

எதுவுமே தலையாட்டுவதில்லை ! 


                        -  நா. அருண் வாசகன்

No comments:

Post a Comment