Thursday, March 7, 2019

பூமி
அவள் கருவறை..

கடல்
கரு சூழ்ந்து
ததும்பும் பனிக்குடம்..

காரிருள் வானம்
அவள் கருங்கூந்தல்..

நதி
ரௌத்திரக் குருதி பாயும்
பச்சை நரம்புகள்..

முழுநிலா
நெற்றியின் இடைத் தங்கும்
வெற்றித் திலகம்..

விண்மீன்
அயராத உழைப்பின்
அடையாளமாய்ச் சிதறிய
வியர்வைத் துளிகள்..

இடி
கால் சிலம்பு தகர்க்கும்
பேரொலி..

மின்னல்
கண் சிமிட்டிய இடைவெளி..

விதை
அவள் சூல் தங்கும்
உயிர்துளி..

விருட்சம்
அவள் வயிறு கிழித்து
சிருஷ்டித்த பெருவனம்..

ஆண்
மாதொரு பாகத்தில்
பிரிந்த பிண்டம்..

பெண்
அன்பின் வடிவெனச்
சுழலும்
படைப்பின் பேரண்டம்..

Sunday, May 20, 2018

இந்த நடு நிசியில்
என்னை மிரளச் செய்தது ...
ஒரு பெண் பறவையின் குரலாகவும் இருக்கலாம்...
யாசகம் கேட்கும் சிறுமியின்
கை நிறைய
ஸ்மைலி பொம்மைகள்...

Wednesday, December 6, 2017

முறுவல் சிந்து..
மழை நேர தேநீர் பருகுதல்
கொள்ளை பிரியம் எனக்கு...

இதழ் கவ்வு..
குவளையின் செஞ்சூட்டு
நுனியென்னை ஸ்பரிசிக்கிறது..

உடன் பருகு..
அன்றில் முன்னிரவு
சாயல் போல்
கவிதை புணர்..

Monday, April 8, 2013

இன்னொன்று ..!!


ஒரு நெடுந்தூரச் சாலையின் 

ஏதோ ஒரு குளக்கரையில் ...

ஏதோ ஒரு மரநிழலில் ...

ஏதோ ஒரு மணல்பரப்பில்... 

சின்னதாய் ஒளித்து வைக்கப்படுகிறது ...          

ஒரு சிட்டிகையில் ஏதோ ஒன்று...


 மீண்டுமொரு நாளின் தகையாறுதலுக்காக  ....!!!!!

Saturday, March 9, 2013

இரவு தீர்ந்தே விட்டது ....

இனி...


இரண்டு உயிர் ..


இரண்டு உடல் ....!!!!!!

...............


உயிர் அறுந்து கொண்டிருக்கிறது 

பொழிதல்களி ன் ஒத்ததிர்வில் 

கூடல் சகட்டின் முனகல் ஓலம் ...


இருவேறு மௌன இடைவெளியில் 

சட்டெனத் துளிர்க்கிறது இன்னொரு இயல்பரியா மௌனம் ....!!??


போன்சாய் மரங்களும் ..

அதுசார்ந்த குட்டிக் குருவிகளும் ..

வாலறுந்த பூனையும் ..

சில காகிதப் பூக்களும் 

மீதமிருத்தலை நிரப்பிக் கொண்டிருந்தன 


மீண்டலில்  சன்னல் விரிகிறது 

அதே வெள்ளை வானம் ..

அதே குளிர் 

மற்றும் கடைசி ஈரச் சொட்டு ...